2 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் தீயில் எரிந்து நாசம்
கழுகுமலை அருகே எந்திரம் மூலம் அறுவடை செய்தபோது ஏற்பட்ட தீவிபத்தில் 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் எரிந்து நாசமானது.
கழுகுமலை:
தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம் கிராமத்தை சேர்ந்த ரகுராம் மனைவி தனலட்சுமி. இவரது விவசாய நிலம் கழுகுமலை அருகே உள்ள காலாங்கரைபட்டி கிராமத்தில் உள்ளது. அங்கு சுமார் 2 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தனர். தற்போது விவசாய நிலத்தை தனலட்சுமியின் தந்தை கணபதி (வயது 60) பராமரித்து வந்தார். நேற்று மதியம் 12 மணியளவில் எந்திரம் மூலம் மக்காச்சோளம் அறுவடை செய்யும் பணிகள் நடந்தது. அப்போது எந்திரத்தில் வந்த தீப்பொறி மக்காச்சோள பயிர்கள் மீது விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி மக்காச்சோள பயிர்களில் கொழுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கழுகுமலை தீயணைப்பு சிறப்பு அதிகாரி மலையாண்டி (போக்குவரத்து) தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருப்பினும், சுமார் 2 ஏக்கரில் மக்காச்சோள பயிர்கள் தீயில் எரிந்து நாசமானது. அதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீயில் கருகிய பயிர்களை காலாங்கரைபட்டி கிராம நிர்வாக அதிகாரி விஜயா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.