மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது
உடுமலையில் மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மூதாட்டியிடம் நகை பறிப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை யசோதா ராமலிங்கம் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது80). இவருக்கு திருமணம் ஆகாததால் தனது சகோதரருடன் வசித்து வருகிறார். ராஜம்மாள் கடந்த 12-ந் தேதி உடுமலை காந்திநகரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்றதாக தெரிகிறது. பின்னர் சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் ராஜம்மாள் அணிந்து இருந்த 2½ பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.
இது குறித்து ராஜம்மாள் உடுமலை போலீசில் புகார் செய்தார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் உடுமலைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மர்ம ஆசாமிகளை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன் பேரில் தனிப்படை போலீசார் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தலைமறைவான மர்ம ஆசாமிகளை பல்வேறு பகுதியில் தீவிரமாக தேடி வந்தனர்.
2 வாலிபர்கள் கைது
இந்த நிலையில் உடுமலை பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்த பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளில் இருந்த 2 பேரும் அவர்கள்தான் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த மர்ம ஆசாமிகள் கோவையை சேர்ந்த சரவணன் (31), கண்ணன் (20) என்பதும் ராஜம்மாளிடம் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்றதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் சரவணன், கண்ணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.