கூத்தாநல்லூர் அருகே, தீக்குளித்து பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக மாமனார்- மாமியார் கைது
கூத்தாநல்லூர் அருகே தீக்குளித்து பெண் இறந்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக மாமனார், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
கூத்தாநல்லூர் அருகே தீக்குளித்து பெண் இறந்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக மாமனார், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள அக்கரை புதுத்தெரு நீலாவதி நகரை சேர்ந்தவர் ரவி(வயது 46). தூய்மை பணியாளர். இவருடைய முதல் மனைவி சுசிலா. இவர்களுக்கு ரகு(28) என்ற மகன் உள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சுசிலா இறந்தார்.
அதன்பிறகு சுமதி (38) என்ற பெண்ணை ரவி 2-வதாக திருமணம் செய்து கொண்டார். ரவியின் முதல் மனைவியின் மகன் ரகுவுக்கும், கொல்லுமாங்குடி பில்லூர் நடுநத்தம் சிவன்கோவில் தெருவை சேர்ந்த குமாரசாமி மகள் காளியம்மாள்(25) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இடத்தை காலி செய்யக்கூறி தகராறு
திருமணமான பிறகு மனைவி காளியம்மாள் மற்றும் குழந்தையுடன் ரகு தனது தந்தை ரவிக்கு சொந்தமான இடத்தில் தனி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் காளியம்மாளிடம் அவருடைய மாமனார் ரவியும், மாமியார் சுமதியும் இடத்தை காலி செய்யக்கூறி அடிக்கடி தகராறு செய்து வந்தனர்.
இதனால் மனவேதனை அடைந்த காளியம்மாள் சம்பவத்தன்று உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளித்தார். இதில் ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காளியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
உதவி கலெக்டர் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த காளியம்மாளின் பெற்றோர் தங்களுடைய மகளின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி, காளியம்மாளின் உடலை வாங்க மறுத்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கூத்தாநல்லூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
காளியம்மாளுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் அவருடைய சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனாமணி விசாரணை நடத்தினார். இதில் இடப்பிரச்சினை காரணமாக மாமனாரும், மாமியாரும் அடிக்கடி தகராறு செய்து வந்ததால் மனமுடைந்த காளியம்மாள் தீக்குளித்து இறந்தது தெரியவந்தது.
தற்கொலைக்கு தூண்டியதாக கைது
இதனையடுத்து காளியம்மாளை தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக ரவி, அவருடைய மனைவி சுமதி ஆகியோர் மீது கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.