வெள்ளமடம் அருகே கோழிக்கடை உரிமையாளரை பழிவாங்க டெம்போவை கடத்திய 2 பேர் கைதுபரபரப்பு தகவல்
வெள்ளமடம் அருகே கோழிக்கடை உரிமையாளரை பழிவாங்க டெம்போவை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆரல்வாய்மொழி:
வெள்ளமடம் அருகே கோழிக்கடை உரிமையாளரை பழிவாங்க டெம்போவை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
டெம்போ கடத்தல்
திட்டுவிளையை சேர்ந்தவர் நிஜாம். இவர் கோழிக்கடை நடத்தி வருகிறார். இவர் டெம்போவை வெள்ளமடம் அருகே நாக்கால்மடம் பெட்ரோல் நிலையத்தில் நிறுத்துவது வழக்கமாம்.
இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி அன்று நிறுத்தியிருந்த டெம்போவை காணவில்லை. யாரோ மர்மநபர்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நிஜாம் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான தனிப்படையினர் திருட்டு நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
2 பேர் கைது
அப்போது ஏற்கனவே நிஜாம் கோழிக்கடையில் வேலை பார்த்த மேலப்பாளையத்தை சேர்ந்த இப்ராகீம் (வயது 24) என்ற முகம்மது பாதுஷாவும், அவருடன் அதே ஊரை சேர்ந்த சலீம் புகாரி (27) என்பவரும் சேர்ந்து டெம்போவை கடத்தி சென்றது தெரியவந்தது.
இந்தநிலையில் தனிப்படையினர் தொடர்ந்து தேடிவந்த நிலையில் 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட டெம்போவை கோவைக்கு சென்று மீட்டனர்.
பரபரப்பு தகவல்
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. அதாவது கோழிக்கடை உரிமையாளரை பழிவாங்க டெம்போவை நண்பருடன் சேர்ந்து திருடியது அம்பலமானது.
இப்ராகீம், நிஜாம் கடையில் வேலை பார்த்த போது பணத்தை எடுத்து விட்டு ஓடி விட்டார். ஆனால் நிஜாம் அவருடைய வீடு வரைக்கு சென்று பணத்தை கறாராக வாங்கி விட்டார். இதனால் கோழிக்கடை உரிமையாளரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் டெம்போவை கடத்தி சென்று விற்க முயன்றது தெரியவந்தது. நிஜாமிற்கு சொந்தமான டெம்போ நிறுத்தும் இடம் உள்ளிட்டவை இப்ராகீமிற்கு நன்றாக தெரியும். டெம்போவை கோவைக்கு சென்று விற்க முயன்ற போது சில இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே 2 பேரும் போலீசிடம் வசமாக சிக்கி கொண்டனர் என்பது தெரியவந்தது.