வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய 2 பேர் கைது
ஜோலார்பேட்டை அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்தியதாக பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
விபசாரம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாச்சல் பகுதியில் 3 பெண்களை வைத்து விபசாரம் செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து 3 பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது. விபசார தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 5 பேரை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 43 வயது பெண், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண், ஆம்பூர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண் என தெரிய வந்தது.
பெண் உள்பட 2 பேர் கைது
இவர்களை வைத்து விபசார தொழில் செய்தது ராதிகா, ராகுல், ஜோலார்பேட்டை அருகே பால்னாங்குப்பம் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் மகன் தீபக் (வயது 20) மற்றும் சேலம் ஓமலூர் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மனைவி மேனகா (29) என்பது தெரிய வந்தது. அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து தீபக், மேனகா ஆகிய இருவரையும் கைது செய்தனர். ராதிகா, ராகுல் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
விபசார தொழிலில் ஈடுபட்ட 3 பெண்களை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை காப்பகத்தில் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால் நேற்று ஜோலார்பேட்டை பகுதி பரபரப்பாக காணப்பட்டது.