மதுரை புறநகர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது - 25 பவுன் நகைகள் பறிமுதல்
மதுரை புறநகர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை புறநகர் பகுதியில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாத வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மதுரை ஊமச்சிகுளம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் 2-வது தெரு பகுதியை சேர்ந்த அர்ஜூனன் என்பவரது வீட்டிலும், அடுத்த தெருவில் உள்ள கணேசன் என்பவரது வீட்டிலும் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, வீட்டில் இருந்து தங்க நகைகள், வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.
இதுகுறித்து ஊமச்சிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இந்த தொடர் திருட்டில் ஈடுபட்டது ஒத்தக்கடையை அடுத்த பட்டணம் பகுதியை சேர்ந்த பெரியசாமி (வயது 25) மற்றும் அவரது மைத்துனர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஜெய்கணேஷ் (27) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் 2 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதனை அறிந்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 25 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள், திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். திருட்டு சம்பவம் நடந்த 2 தினங்களில் குற்றவாளிகளை பிடித்து நகையை மீட்ட ஊமச்சிகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் உள்ளிட்ட தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் பாராட்டினார்.