கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது
குடியாத்தம் அருகே கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடியாத்தம் அருகே பரதராமி தமிழக ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ளது. இப்பகுதியில் வனத்துறை சோதனை சாவடி, மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீஸ் சோதனை சாவடி உள்ளன. தமிழக போலீசாரின் கெடுபிடியால் ஆந்திராவில் இருந்து கஞ்சா வியாபாரிகள் தமிழக எல்லைப் பகுதி வரை வாகனங்களில் வந்து அங்கிருந்து வயல்வெளிகள் மூலமாக பரதராமி பகுதிக்குள் நடந்து வந்து கஞ்சா விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாவுக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டுகள் மோகன், செந்தில்குமார், பிரகாஷ், முரளி உள்ளிட்ட போலீசார் இரண்டு குழுக்களாக பிரிந்து பரதராமி கொத்தூர் சாலையிலும், பரதராமி கங்கையம்மன் கோவில் அருகிலும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது கொத்தூர் ரோடு பகுதியில் நடந்து வந்தவரை மடக்கி பிடித்து சோதனை செய்த போது அவர் வைத்திருந்த பையில் கால் கிலோ கஞ்சா இருந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில் சித்தூரை அடுத்த யாதமரி மண்டலம் கம்மம்பல்லி பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 57) என தெரிய வந்தது, அதேபோல் கெங்கையம்மன் கோவில் அருகே வந்த வாலிபரை பிடித்து சோதனை செய்த போது அவரும் அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ் (26) என்பது ெதரிந்தது. அவரிடம் கால் கிலோ கஞ்சா இருந்தது.
இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.