ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
விழுப்புரம்
உளுந்தூர்பேட்டை அருகே திருநருங்குன்றம் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நின்று கொண்டிருந்த மினி லாரி ஒன்றை திருநாவலூர் போலீசார் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்ததில் 300 சாக்கு மூட்டைகளில் 15 டன் ரேஷன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த 5 பேர் தப்பி ஓடி தலைமறைவாகினர்.
பின்னர் அந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்து விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் திருநருங்குன்றம் சுற்று வட்டார கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய உளுந்தூர்பேட்டை தாலுகா வடவாம்பாக்கத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் சின்னத்தம்பி (வயது 36), கிளியூர் கிராமத்தை சேர்ந்த சாரதி மகன் ரகோத்தமன் (27) ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.