செல்போன்களை திருடிய 2 பேர் கைது
நன்னிலம் அருகே செல்போன்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்:
நன்னிலம் அருகே செல்போன்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன்கள் திருட்டு
மதுரை மேலூரை சேர்ந்தவர்கள் முருகானந்தம், அடைக்கலராஜ், ராஜகோபால். கட்டுமான தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும், நன்னிலத்தை அடுத்த ஸ்ரீவாஞ்சியம் அருகே தங்கியிருந்து தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அங்கு நேற்று முன்தினம் இரவு தங்களுடைய செல்போன்களை வைத்துவிட்டு தூங்கி கொண்டிருந்தனர்.
நேற்று காலையில் எழுந்துபார்த்த போது 3 செல்போன்களையும் காணவில்லை. இதுகுறித்து முருகானந்தம் நன்னிலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் ஸ்ரீவாஞ்சியத்தில் ஒரு செல்போன் கடை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், குடவாசல் மண்டபத் தெருவை சேர்ந்த பரணிதரன் (வயது25), குடவாசல் காலனி தெருவை சேர்ந்த ராகுல் (25) என்பதும், இவர்கள் கட்டுமான தொழிலாளர்களிடம் இருந்து செல்போன்களை திருடியதும், அந்த செல்போன்களை கடையில் விற்பனை செய்ய வந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பரணிதரன், ராகுல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். செல்போன்கள் திருட்டுப்போன 24 மணி நேரத்தில் திருடர்களை பிடித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.