ஓட்டப்பிடாரம் அருகே காற்றாலை நிறுவனத்தில் ரூ.35 லட்சம் செம்புக்கம்பி திருடிய 2 பேர் கைது


தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே காற்றாலை நிறுவனத்தில் ரூ.35 லட்சம் செம்புக்கம்பி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே காற்றாலை நிறுவனத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள செம்புக்கம்பிகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

செம்புக்கம்பிகள் திருட்டு

ஓட்டப்பிடாரம் தாலுகா குதிரைகுளம் கிராமம் அருகே தனியார் காற்றாலை நிறுவனத்துக்கு சொந்தமான கிட்டங்கி உள்ளது. இங்கு கடந்த 14-ந்தேதி செம்புக்கம்பிகள் சுற்றி வைக்கப்பட்டிருந்த 2 டிரம்கள் திருடு போயின.

இதுகுறித்து தனியார் காற்றாலை நிறுவன கிட்டங்கியின் மேலாளர், பாளையங்கோட்டை மகாராஜாநகர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 37) என்பவர் பசுவந்தனை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மணியாச்சி துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

2 பேர் கைது

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், நிறுவன கிட்டங்கியில் காவலாளியாக வேலை பார்க்கும் பொம்மையாபுரம் பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் மதியழகன் (22), கோவில்பட்டி ஜமீன் கோட்டை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (48) ஆகிய 2 பேரும் சேர்ந்து செம்புக்கம்பிகளை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மாரியம்மாள் தலைமையில் மதியழகன், ராஜேந்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் திருட்டுக்கு உடந்தையாக இருந்த 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள செம்புக்கம்பிகள் சுற்றப்பட்டு இருந்த 2 டிரம்கள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story