மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது


மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
x

திண்டுக்கல் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

2 பேர் சிக்கினர்

வடமதுரையில், திண்டுக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் வடமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி மற்றும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் ஒரு மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், 2 வாலிபர்களையும் வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து வடமதுரை போலீசார், அந்த வாலிபர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வல்லரசு (வயது 19), அரசமரத்து தெருவை சேர்ந்த கவுதம்ராஜ் (19) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

நகை பறிப்பு

பிடிபட்ட 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் மோர்பட்டி பிரிவு அருகே, மணப்பாறை அருகே பூசாரிபட்டியை சேர்ந்த தனலட்சுமி (50), தனது மகள் சங்கீதாவுடன் ஒரு மொபட்டில் சென்றார். அப்ேபாது வல்லரசுவும், கவுதம்ராஜூவும் தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து சென்றனர். இதேபோல் தங்கம்மாபட்டியை சேர்ந்த அபிராமி (35) என்பவர் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, இந்த வாலிபர்கள் நகை பறித்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வல்லரசு மற்றும் கவுதம்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்கள் மீது திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் செல்போன் திருட்டு, மோட்டார் சைக்கிள் திருட்டு, போக்சோ உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story