கட்டுமான நிறுவனத்தில் ஜாக்கிகளை திருடிய 2 பேர் கைது
ஆரல்வாய்மொழி அருகே கட்டுமான நிறுவனத்தில் ஜாக்கிகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே கட்டுமான நிறுவனத்தில் ஜாக்கிகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜாக்கிகள் திருட்டு
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் பிரேம்சந்தர் (வயது32). இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மேற்பார்வையில் முப்பந்தல் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் உள்ள ஒரு கட்டிடத்தை வேறு இடத்திற்கு நகர்த்தி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பிரேம்சந்தர் சென்னைக்கு சென்றுவிட்டு மீண்டும் முப்பந்தலுக்கு திரும்பினார். அப்போது, கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் வைத்திருந்த 31 சிறிய லிப்டிங் ஜாக்கிகள், 7 சிப்டிங் ஜாக்கிகள் ஆகியவை மாயமாகி இருந்தன. யாரோ மர்ம ஆசாமிகள் அவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.85 ஆயிரத்து 700 என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பிரேம்சந்தர் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஸ்டீபன், ஜாண் கென்னடி ஆகியோர் குமாரபுரம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் நெல்லை மாவட்டம் ஆவரைகுளத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 43), முத்துராஜ் (65) என்பதும், முப்பந்தல் பகுதியில் கட்டுமான பணிக்கு வைத்திருந்த ஜாக்கிகளை திருடியதும், அவற்றை விற்பனை செய்வதற்காக பல இடங்களில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 38 ஜாக்கிகள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.