ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது
நாட்டறம்பள்ளி அருகே வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் வழியாக வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பச்சூர் பகுதிக்கு விரைந்து சென்று வாகன சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி வெளி மாநிலத்திற்கு கடத்தியது தெரியவந்தது.
இதனையெடுத்து காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் வாணியம்பாடியை அடுத்த ஆவரங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தாஸ் என்பவரது மகன் சந்தோஷ் (வயது 33), நாட்டறம்பள்ளி அருகே உள்ள முத்தனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சீனன் என்பவரது மகன் ஏழுமலை (36) என தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவுசெய்து 2 பேரையும் கைது செய்தனர். ஒரு டன் ரேஷன் அரிசியை காருடன் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசிவாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.