நெய்வேலியில் என்ஜீனியர் கொலை வழக்கில் 2 பேர் கைது


நெய்வேலியில் என்ஜீனியர் கொலை வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 17 Jun 2023 1:06 AM GMT)

நெய்வேலியில் என்ஜீனியர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டாா்.

கடலூர்


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நடுக்குப்பம் நன்னி தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 56). இவரது மகன் ராஜேந்திரன்(28). என்ஜினீயர். இந்த நிலையில் ராஜேந்திரன், தனது நண்பர்களான நெய்வேலி 21-வது வட்டத்தை சேர்ந்த செல்லப்பன், கொம்பாடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த உத்தண்டராஜன் ஆகியோருடன் நெய்வேலி 16-வது வட்டத்தில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, நண்பர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்லப்பன், ஓட்டலில் இருந்த விறகு கட்டையை எடுத்து ராஜேந்திரனை சரமாாியாக தாக்கினார்.


இதற்கு உத்தண்டராஜன் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜேந்திரனை கொலை செய்தவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் வடக்குத்து அடுத்த கன்னிதோப்பு பாலம் அருகே பதுங்கியிருந்த செல்லப்பன் (33), உத்தண்டராஜன் (28) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story