ராமநத்தம்உரக்கடைக்காரர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது
ராமநத்தம் உரக்கடைக்காரர் வீட்டில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநத்தம்,
நகை-பணம் கொள்ளை
கடலூர் மாவட்டம் ராமநத்தம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். உரக்கடைக்காரர். இவர் கடந்த 17.11.2022 அன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவருடைய வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.3 லட்சம் மற்றும் 3 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணராஜ் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
2 வாலிபர்கள் கைது
அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் 2 பேரும் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (வயது 28) மற்றும் அவரது கூட்டாளியான திருநெல்வேலி மாவட்டம் பாளையச்செட்டிக்குளத்தை சேர்ந்த இருதயராஜ் மகன் அந்தோணி என்கிற அருவா பாண்டி (22) என்பதும், இவர்கள் இருவரும் பொள்ளாச்சி திருட்டு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் ராமநத்தம் போலீசார் காவலில் எடுத்து ராமநத்தம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ராமநத்தம் விவசாயி கிருஷ்ணராஜ் என்பவர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் ராமநத்தம் போலீசார் கைது செய்து, மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.