சேலத்தில் 2 ஏ.டி.எம். மையங்களில் திருட முயற்சி-கண்காணிப்பு கேமராவை உடைத்ததால் பரபரப்பு


சேலத்தில் 2 ஏ.டி.எம். மையங்களில் திருட முயற்சி-கண்காணிப்பு கேமராவை உடைத்ததால் பரபரப்பு
x

சேலம் கொண்டலாம்பட்டியில் 2 ஏ.டி.எம். மையங்களில் திருட்டு முயற்சி நடந்தது. மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம்

கொண்டலாம்பட்டி:

ஏ.டி.எம். மையங்கள்

சேலம் கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாலிகாடு பகுதியில் அருகருகே 2 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இவற்றில் இரவு நேர காவலாளி இல்லை. இந்தநிலையில் நேற்று அதிகாலை வாடிக்கையாளர் ஒருவர் இந்த மையங்களுக்கு பணம் எடுக்க சென்றார்.

அப்போது ஒரு மையத்தில் விபூதி, குங்குமம் தூவப்பட்டு இருந்தது. இது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அங்கு மேற்கூரை, கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் கருவி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம். எந்திரங்கள் உடைக்கப்படவில்லை என்பதும், ஒரு மையத்தில் மட்டும் மேற்கூரை, கண்காணிப்பு கேமரா, அலாரம் கருவி ஆகியவை உடைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில் மர்ம நபர் ஒருவர் வாளியுடன் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து, விபூதி, குங்குமத்தை தூவியதும், மற்றொரு மையத்துக்கு சென்றபோது அங்கு அலாரம் ஒலித்ததால், அதை சேதப்படுத்தியதும் தெரியவந்தது. மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

பரபரப்பு

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம், ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த நபர் யார்?, அவர் பணத்தை திருடும் எண்ணத்துடன் அங்கு வந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story