லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல் நடித்து நகைக்கடையில் மோசடி செய்ய முயற்சி- அழகுநிலைய பெண்கள் 2 பேர் கைது
தூத்துக்குடியில், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல் நடித்து நகைக்கடையில் மோசடி செய்ய முயன்றதாக அழகுநிலைய பெண்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடியில், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல் நடித்து நகைக்கடையில் மோசடி செய்ய முயன்றதாக அழகுநிலைய பெண்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நகைக்கடைக்கு வந்த பெண்கள்
தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் ஜவுளிக்கடை மற்றும் அதனுடன் இணைந்த நகைக்கடையும் உள்ளது. இந்த நகைக்கடைக்கு நேற்று முன்தினம் மாலையில் 2 பெண்கள் வந்தனர். அவர்கள் நகைக்கடையில் பல்வேறு நகைகளை தேர்வு செய்து உள்ளனர். அதன்பிறகு, தாங்கள் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் என்றும், கடையின் உரிமையாளரை சந்திக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். இதனால் கடையின் உரிமையாளர், மேற்பார்வையாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் அந்த பெண்களிடம் பேசினர்.
அப்போது அந்த பெண்கள், ஏரலில் உள்ள உங்கள் கடையில், கடை பெயர் கெட்டு போகும் அளவுக்கு பெரிய பிரச்சினை வர உள்ளது. அதனை சமாளிக்க வேண்டுமென்றால் நாங்கள் கேட்கும் நகையை எங்களிடம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு என்று மிரட்டி உள்ளனர்.
அப்ேபாது சிவராமகிருஷ்ணன், எந்த அதிகாரியும் எங்களிடம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் மொத்த நகையையும் கேட்பது இல்லை. குறிப்பிட்ட அளவு தொகையை குறைத்து தருவதாக கூறி நகையை வாங்குவார்கள் என்று தெரிவித்தார். இதை அந்த பெண்கள் ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிவராமகிருஷ்ணன் அந்த பெண்களிடம், உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள் என்று கூறி உள்ளார். அப்போது ஒருவர் மட்டும் அடையாள அட்டையை காண்பித்து உள்ளார்.
மோசடி செய்ய முயற்சி
இதைத்தொடர்ந்து சந்தேகம் அடைந்த சிவராமகிருஷ்ணன் மத்தியபாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். தொடர்ந்து அந்த பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் ஏரல் சாலை ரோட்டை சேர்ந்த சரவணக்குமார் மனைவி பாபிராஜலட்சுமி (வயது 30), சேலம் மாவட்டம் வெள்ளரிவெள்ளி, பெரிய காட்டை சேர்ந்த சின்னசாமி மனைவி பரமேசுவரி (36) என்பதும், இருவரும் அழகு நிலையத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் போன்று நடித்து மோசடியில் ஈடுபட முயன்றதையும் கண்டுபிடித்தனர்.
கைது
இதைத்தொடர்ந்து மத்தியபாகம் போலீசார் மோசடி மற்றும் திருட்டு முயற்சி வழக்குப்பதிவு செய்து பாபிராஜலட்சுமி, பரமேசுவரி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பாபிராஜலட்சுமி மீது ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் போலியாக கிளினிக் நடத்தியதாக வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பட்டப்பகலில் 2 பெண்கள் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல் நடித்து மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.