கோவில் உண்டியலை உடைத்து திருடிய வழக்கில் 2 சிறுவர்கள் கைது


கோவில் உண்டியலை உடைத்து திருடிய வழக்கில் 2 சிறுவர்கள் கைது
x

பொன்னை அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடிய வழக்கில் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

உண்டியல் திருட்டு

வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த கீரைசாத்து கிராமத்தில் பழமை வாய்ந்த ரேணுகாம்பாள் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த வருடம் ஆடி மாதம் தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை வருகிற ஆடி மாதம் நடைபெறும் தீமிதி திருவிழாவின் போது எண்ணப்பட இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வரும் கீரைசாத்து கிராமத்தை சேர்ந்த இருசன் (வயது 75) என்பவர் பகல் 1 மணி அளவில் கோவிலை பூட்டிவிட்டு மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்றார். பின்னர் 3 மணி அளவில் மீண்டும் கோவிலுக்கு வந்தபோது கோவிலில் இருந்த உண்டியல் காணாமல் போயிருந்தது.

இதுகுறித்து கிராம பொதுமக்கள் பொன்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருடப்பட்ட உண்டியல் உடைக்கப்பட்டு கோவிலின் பின்பக்கம் உள்ள ஏரியில் வீசப்பட்டு கிடந்தது.

2 சிறுவர்கள் கைது

இதுகுறித்து பூசாரி இருசன் கொடுத்த புகாரின் பேரில் பொன்னை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று பொன்னை நான்கு ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சேர்க்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், கீரை சாத்து ரேணுகாம்பாள் கோவிலில் உண்டியலை உடைத்து திருடியதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து பணம், நகையை மீட்ட பொன்னை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசார், இரண்டு சிறுவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து வேலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.


Next Story