நண்பன் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற 2 கல்லூரி மாணவர்கள் கைது


ஒடுகத்தூர் அருகே நண்பன் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

ஒடுகத்தூர் அடுத்த முத்துக்குமரன் மலை பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 23) விவசாயி. அதே கிராமத்தைச் சேர்ந்த விஜயன் மகன் அபிமன்யு (23), படவேட்டான் மகன் கோகுல் (21) ஆகிய இருவரும் அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர். புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் வீட்டில் சாமி கும்பிடுவதற்காக பொருட்கள் வாங்க சிலம்பரசன் தன் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் ஒடுகத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஒடுகத்தூர் அண்ணா சிலை அருகே வரும்போது மது போதையில் இருந்த அபிமன்யு மற்றும் கோகுல் ஆகிய இருவரும் சிலம்பரசனை வழி மடக்கி, பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவியிடம் தவராக நடக்க முயன்றுள்ளனர். தடுக்க முயன்ற சிலம்பரசனை கீழே தள்ளி உள்ளனர். அவர் கூச்சல் போடவே அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து சிலம்பரசன் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன், தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி ஆகியோர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story