ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கினர்
கும்பகோணம் அருகே வீரசோழன் ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கினர்.
கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் மேல தெருவை சேர்ந்த முஜிப் ரகுமான் மகன் சுலைமான் (வயது 18). பந்தநல்லூர் கருப்பூர் அக்ரகாரத்தை சேர்ந்த நாசர் என்பவரது மகன் முகமது நசீம் (18). நாச்சியார்கோவில் செம்மங்குடி சாதிக்பாட்ஷா மகன் சாகுல்அமீது (18). இவர்கள் 3 பேரும் கோவிலாச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் நேற்று மதியம் உமா மகேஸ்வரபுரம் அருகே வீரசோழன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் நீரில் மூழ்கினர். அவர்களை தண்ணீர் இழுத்துச் சென்றது. அவர்களில் சாகுல் அமீது சிறிது தூரம் சென்ற நிலையில் கரை ஏறி வந்து விட்டார். மற்ற இருவரும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேரம் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அத்துடன் இரவாகி விட்டதால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அவர்களை தேடும் பணி இன்று(செவ்வாய்க்கிழமை) தொடர்ந்து நடக்கிறது.