அடுத்தடுத்து 2 வீடுகளில் புகுந்து 31 பவுன் நகைகள் கொள்ளை


அடுத்தடுத்து 2 வீடுகளில் புகுந்து 31 பவுன் நகைகள் கொள்ளை
x

பழனி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் புகுந்த மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி 31 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

திண்டுக்கல்

நகைகள் கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சின்னகலையம்புத்தூர் ஆர்.ஜி. நகரை சேர்ந்தவர் கோபி (வயது 46). இவருடைய மனைவி சர்மிளா, மகள் ஸ்ரீ மிருதா. கோபி திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பழைய மோட்டார்சைக்கிள்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார் இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோபி ஒரு அறையிலும், சர்மிளா, ஸ்ரீ மிருதா ஆகியோர் ஒரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல் கோபியின் வீட்டு காம்பவுண்டு சுவர் ஏறி உள்ளே குதித்தனர். இதற்கிடையே வெளியே வந்த கோபி கதவை பூட்டாமல் சாத்தி வைத்துள்ளார். இதனால் மர்ம கும்பல் கதவை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த சர்மிளா, ஸ்ரீமிருதாவை கத்தி மற்றும் கடப்பாரையை காட்டி நகை, பணத்தை கேட்டு மிரட்டினர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த நகை மற்றும் பீரோவில் இருந்த நகை என மொத்தம் 27 பவுனை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.

மற்றொரு சம்பவம்

அதைத்தொடர்ந்து அதே பகுதியில் வசித்து வரும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த கருணாகரன் (31) என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்றனர். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த கருணாகரன் மனைவி கவுசல்யா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இதில் அவர் திடுக்கிட்டு எழுந்தார். இதையடு்த்து மர்ம நபர்கள் கருணாகரன் மற்றும் கவுசல்யாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். பின்னர் கவுசல்யா அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் கொள்ளை கும்பலை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

மேலும் மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்தனர்.

அடுத்தடுத்து 2 வீடுகளில் புகுந்து நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பழனி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story