தண்டனை கைதிகள் 2 பேர் அடுத்தடுத்து சாவு


தண்டனை கைதிகள் 2 பேர் அடுத்தடுத்து சாவு
x

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தண்டனை கைதிகள் 2 பேர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தண்டனை கைதிகள் 2 பேர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கைதி சாவு

திருச்சி கொட்டப்பட்டு அம்பாள் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 75). இவர் தஞ்சை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த 25-ந்தேதி இவருக்கு 15 நாட்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

கடந்த 9-ந்தேதி மாலை 6 மணிக்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு கைதி

இதுபோல் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ் என்கிற ஸ்டீபன் (40). இவர் ஒரு வழக்கில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி சிறையில் குளித்துக்கொண்டிருக்கும்போது திடீரென அவருக்கு வலிப்பு வந்து மயங்கி கீழே விழுந்தார்.

உடனே சிறை அதிகாரிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சதீஷ் நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், அதில் 2 வழக்குகளில்தான் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 2 கைதிகள் அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் இறந்தது தொடர்பாக சிறை அதிகாரி (பொறுப்பு) கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story