2 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்
2 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்
அதிராம்பட்டினத்தில் 2 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.
குடிசை வீடுகள் தீப்பிடித்தது
அதிராம்பட்டினம் கரையூர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சம்மாள் (வயது60). அதே பகுதியை சேர்ந்தவர் யோகலட்சுமி (42). இவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உள்ள குடிசை வீடுகளில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அஞ்சம்மாள், யோக லட்சுமி ஆகியோரின் குடிசை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இதைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். தீயை அணைக்க முடியாததால் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
ரூ.4 லட்சம் பொருட்கள் சேதம்
தீயணைப்பு படை வீரர்கள் வருவதற்குள் 2 வீடுகளும் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது. இந்த தீவிபத்தில் வீடுகளில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம், பீரோ எலக்ட்ரானிக் பொருட்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் எரிந்து சேதம் அடைந்தன. இதன் சேதமதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த தீவிபத்து குறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன் விரோதம் காரணமாக வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.