அரிசியை தின்ற 2 பசுமாடுகள் சாவு
மயிலாடுதுறை பழங்காவிரி வாய்க்காலின் கரையில் கொட்டப்பட்ட அரிசியை தின்ற 2 பசுமாடுகள் உயிரிழந்தன. இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை பழங்காவிரி வாய்க்காலின் கரையில் கொட்டப்பட்ட அரிசியை தின்ற 2 பசுமாடுகள் உயிரிழந்தன. இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சேமிப்பு கிடங்கு
மயிலாடுதுறை சித்தர்க்காட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதற்கான அரிசி, பருப்பு மற்றும் உணவுப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.இங்கு அரிசி மூட்டைகளை அடுக்கிவைக்கும் போது அவற்றை எலிகள் மற்றும் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்காக மூட்டைகளின் அடியில் மாத்திரைகள் வைப்பது வழக்கம்.அரிசி மூட்டைகளை வெளியில் அனுப்பிய பிறகு தரையில் கொட்டி வீணாகும் அரிசிகளை கூட்டி கிடங்கிற்கு பின்புறம் உள்ள பழங்காவிரி வாய்க்காலின் கரையில் தொழிலாளர்கள் கொட்டி வருகின்றனர்.
அரிசியை தின்ற 2 மாடுகள் சாவு
இவ்வாறு தரையில் கொட்டிய சேதமடைந்த அரிசிகளில் பூச்சி பிடிக்காமல் இருப்பதற்கான மாத்திரைகள் அதில் கலந்து விடுகிறது. இந்த அரிசிகளை வாய்க்கால் கரைகளில் கொட்டும்போது, அதை மயில் உள்ளிட்ட பறவைகள் தின்று இறந்துள்ளன என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.இந்த நிலையில் நேற்று மாப்படுகை அண்ணாநகரை சேர்ந்த பாப்பாத்தி அம்மாள் என்பவரின் இரண்டு சினை பசுமாடுகள் மேய்ச்சலுக்கு சென்றுள்ளன. இவை பழங்காவிரி ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டு கரையில் கிடந்த அரிசியை திண்றுள்ளன.. இதனால் செரிமான கோளாறு ஏற்பட்டு இரண்டு மாடுகளுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு வழங்க வேண்டும்
இதை தொடர்ந்து கால்நடை டாக்டரை அழைத்துவந்து சிகிச்சை அளித்தும் பயன் அளிக்காமல் 2 மாடுகளும் இறந்துவிட்டது. இந்த மாடுகள் மூலம் வரும் வருவாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தேன். எனவே இறந்த பசுமாடுகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாப்பாத்தி அம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.