மின்னல் தாக்கி 2 பசு மாடுகள் பலி
நத்தம் அருகே மின்னல் தாக்கி 2 பசுமாடுகள் பலியாகின.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள இலுப்பப்பட்டியை சேர்ந்தவா் அண்ணாதுரை (வயது 50). விவசாயி. இவர் 2 பசு மாடுகளை வளர்த்து வந்தார். அந்த 2 மாடும் சினையாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் முன்புறம் உள்ள தென்னை மரத்தடியில் 2 பசு மாடுகளையும் கட்டி வைத்திருந்தார். அப்போது இரவு நேரத்தில் திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அதில் மின்னல் தாக்கி 2 பசுமாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தன.
தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் முத்து, செந்துறை கால்நடை உதவி மருத்துவர் இந்து ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் 2 மாடுகளின் உடல்கள் அங்கேயே பரிசோதனை செய்யப்பட்டது.
இதேபோல் சேத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மங்கம்மா சாலையை சேர்ந்தவர் அழகு (60). இவர் தனது பசுமாட்டை வீட்டின் வெளியே கட்டி இருந்தார். நேற்று முன்தினம் பெய்த பலத்த மழைக்கு அந்த வழியாக சென்ற மின்கம்பி ஒன்று அறுந்து மாட்டின் மீது விழுந்தது. அதில் மின்சாரம் பாய்ந்து அவருடைய பசு மாடு பரிதாபமாக உயிரிழந்தது.