பழனி முருகன் கோவிலுக்கு ரூ.2¾ கோடி வருவாய்


பழனி முருகன் கோவிலுக்கு ரூ.2¾ கோடி வருவாய்
x

உண்டியல் காணிக்கை மூலம், பழனி முருகன் கோவிலுக்கு ரூ.2¾ கோடி வருவாய் கிடைத்தது.

திண்டுக்கல்

உண்டியல் காணிக்கை

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவர்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த மாதம் 21, 22-ந்தேதிகளில் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதன்பிறகு மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று தொடங்கியது.

எண்ணும் பணி

கடந்த 4-ந்தேதி, பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. திருவிழாவுக்கு பிறகு தற்போது உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையிலும், துணை ஆணையர் பிரகாஷ் முன்னிலையிலும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்து வருகிறது.

முன்னதாக உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் உள்ள பணம், தங்கம், வெள்ளியிலான பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அவை தனித்தனியாக பிரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோவில் அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரூ.2¾ கோடி வருவாய்

உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 84 லட்சத்து 34 ஆயிரத்து 319 வருவாயாக கிடைத்தது. இதேபோல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 510 செலுத்தப்பட்டிருந்தது. தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 849 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 14 கிலோ 156 கிராம் (14156) ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. 2-வது நாளாக இன்றும் (புதன்கிழமை) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story