உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 17 லட்சம் வருவாய்
பழனி முருகன் கோவிலில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 17 லட்சம் வருவாய் கிடைத்தது.
பழனி முருகன் கோவில்
முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் பக்தர்கள் வருகை தருகின்றனர். விசேஷம், விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
கோவிலுக்கு வருகிற பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துவதோடு பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் பகுதியில் வைக்கப்பட்ட உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன், கோவில் நிர்வாகம் சார்பில் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த மாதம் 22-ந்தேதி பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதன்பிறகு நேற்று பழனியில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.
தங்கம், வெள்ளி பொருட்கள்
மலைக்கோவில் மண்டபத்தில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமை தாங்கினார். முன்னதாக கோவில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் உள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டன.
பின்னர் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை தனித்தனியாக பிரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
ரூ.2 கோடி வருவாய்
உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 17 லட்சத்து 51 ஆயிரத்து 630 வருவாய் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர். இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 267-ம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இதைத்தவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 865 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 12 ஆயிரத்து 10 கிராம் காணிக்கையாக கிடைத்தது. 2-வது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.