ரூ.2 கோடியில் சி.டி. ஸ்கேன் வசதி
சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.2 கோடியில் சி.டி. ஸ்கேன் வசதி செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி,
சிவகாசியில் விபத்து காலத்தில் தலையில் காயம் அடையும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய சி.டி. ஸ்கேன் வசதி இல்லாமல் மதுரை மற்றும் விருதுநகர் சென்று வந்தனர். இந்தநிலையில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை தொடர்ந்து தொகுதி எம்.எல்.ஏ. அசோகன் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரின் பரிந்துரையோடு அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதன் பயனாக தற்போது சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் மையம் தொடங்க உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடி செலவில் இந்த மையம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் அசோகன் எம்.எல்.ஏ., டாக்டர் அய்யனார், காங்கிரஸ் பிரமுகர் சேர்மத்துரை, மாநகராட்சி கவுன்சிலர் ரவிசங்கர், முத்துமணி, தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.