கல்குவாரி தொழிலை காப்பாற்றக்கோரி 2-வது நாளாக உண்ணாவிரதம்
கல்குவாரி தொழிலை காப்பாற்றக்கோரி பல்லடம் அருகே 2-வது நாளாக கல்குவாரி தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.
விவசாயிகள் போராட்டம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி, பூமலூர் உள்ளிட்ட இடங்களில் அரசு அனுமதி பெற்று கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கல் குவாரியால் விவசாயம் பாதிக்கப்படுவதாக புகார் கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து பல்லடம் பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றை தற்காலிகமாக மூடுவதற்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டுவரும் கல் குவாரிகளுக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகளை கூறி போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், கல்குவாரி தொழிலுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். கல்குவாரி தொழிலை நம்பியுள்ள பல லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டமும், உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறும் என கல் குவாரி உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.
உண்ணாவிரதம்
இதன்படி பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் நேற்று முன்தினம் கல்குவாரி வேலை நிறுத்தம் செய்து கோவை - திருச்சி மெயின் ரோட்டில் லாரிகளை வரிசையாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக நேற்று கல்குவாரி தொழிலாளர்கள், உரிமையாளர்கள், குடும்பத்தினர் உள்பட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் உரிமையாளர் சங்க மாநில தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஜல்லி கிரஷர், மற்றும் குவாரி உரிமையாளர் சங்க தலைவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பொருளாளர் சுப்பிரமணியம், கல் குவாரி உரிமையாளர்கள் சிவக்குமார், ராமகிருஷ்ணன், வெங்கடாசலம், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
2-வது நாளாக போராட்டம்
பின்னர் நிருபர்களிடம் மாநில தலைவர் சின்னசாமி கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் என்ற போர்வையில் சிலர் கல்குவாரி தொழில்களை நலிவடைய செய்யும் வகையில் செயல்பட்டு வருவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.
கல் குவாரி தொழிலில் அரசுக்கு வருவாய் கிடைப்பதோடு அரசின் திட்டப் பணிகளுக்கும், ஏழை, எளியோர் வீடு கட்டவும் தேவையான ஜல்லி, எம்.சாண்ட் போன்றவை உற்பத்தி செய்து தருகிறோம். கல் குவாரி தொழில் தடை ஏற்பட்டால் வெளி மாநிலங்களில் இருந்து பல மடங்கு விலை கொடுத்து தான் ஜல்லி, எம்.சாண்ட் போன்றவற்றை வாங்க முடியும்.
ரூ.200 கோடி உற்பத்தி இழப்பு
அரசு தற்காலிகமாக மூடிய கல்குவாரியை திறக்க அனுமதி வழங்க வேண்டும், கல்குவாரி தொழிலையும் இதனை நம்பி உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும். கடந்த 2 நாட்களாக நடந்த வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் ரூ.200 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.