பிறந்து 2 நாளே ஆன ஆண் குழந்தை ஆற்றில் வீசப்பட்ட துயரம்


பிறந்து 2 நாளே ஆன ஆண் குழந்தை ஆற்றில் வீசப்பட்ட துயரம்
x
வேலூர்

குடியாத்தம்

குடியாத்தம் அருகே பிறந்து 2 நாளே ஆன குழந்தை ஆற்றில் பிணமாக வீசப்பட்ட துயரம் நடந்துள்ளது. இரண்டு நாட்களுக்குள் இரண்டாவதாக சம்பம் நடந்துள்ளது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தொப்புள் கொடியுடன்...

குடியாத்தத்தை அடுத்த செதுக்கரை பொன்னம்பட்டி ஆற்றில் நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அங்கு ஒரு இடத்தில் காக்கைகள் சுற்றி சுற்றி வந்ததை கண்டு அருகில் சென்று பார்த்தபோது ஆண் சிசு இருந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் டவுன் போலீசார் விரைந்து சென்றனர்.தொப்புள் கொடியுடன் அந்த சிசு பிணமாக கிடந்தது. அந்த குழந்தை பிறந்த 2 நாளே ஆகியிருக்க வேண்டும் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

அதன் அருகிலேயே ஜவுளிக்கடையின் கட்டைப்பையும் ஒன்று இருந்தது இதனையடுத்து போலீசார் அந்த சிசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை ஆற்றில் வீசி சென்ற சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

காரணம் என்ன?

இந்த குழந்தை எங்கு பிறந்தது வீசிச்சென்றது யார் என்பது தெரியவில்லை. வீட்டிலேயே பிரசவம் நடந்தபோது இறந்ததால் இதனை இவ்வாறு வீசினார்களா? அல்லது தவறான வழியில் கருத்தரித்ததால் அவமானம் கருதி அதனை பெற்ற பெண் பையில் போட்டு வீசி விட்டு சென்றாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன் தினம் குடியாத்தம் கூட நகரம் ரோடு புத்தர் நகர் பகுதியில் கால்வாயில் குழந்தை சிசு ஒன்று வீசப்பட்டிருந்தது.

இரண்டு நாட்களில் குழந்தையை வீசி சென்ற சம்பவங்கள் குடியாத்தம் பகுதியில் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.



Next Story