நேரு பூங்காவில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி


நேரு பூங்காவில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி நேரு பூங்காவில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து குன்னூர் ஆர்.டி.ஓ. ஆலோசனை மேற்கொண்டார்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி நேரு பூங்காவில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து குன்னூர் ஆர்.டி.ஓ. ஆலோசனை மேற்கொண்டார்.

காய்கறி கண்காட்சி

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. அடுத்த மாதம் கோடை விழா நடக்கிறது. இதன் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் மே 6, 7-ந் தேதிகளில் காய்கறி கண்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் செயற்கை நீரூற்று, ரூ.50 லட்சம் செலவில் பூங்காவை சுற்றிலும் சுற்றுச்சுவர், டிக்கெட் கவுன்டர், 2 கடைகளும் கட்டப்பட்டது.

மேலும் கழிப்பிடங்கள் புதுப்பிக்கப்பட்டு சுவர்களில் வனவிலங்குகளின் ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டன. பூங்கா புதுப்பொலிவு பெற்றுள்ளதால், நடப்பாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வருகை தர உள்ளனர். இந்தநிலையில் நேற்று காய்கறி கண்காட்சி நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோத்தகிரி நேரு பூங்காவில் நடந்தது. கூட்டத்திற்கு குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷணகுமார் தலைமை தாங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பேசியதாவது:-

பாதுகாப்பு ஏற்பாடுகள்

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காய்கறி சிற்பங்கள் மற்றும் சிறப்பான அரங்குகளை அமைக்க வேண்டும். கோத்தகிரியின் பெருமையை உணர்த்தும் வகையில் செல்பி ஸ்டேண்ட் அமைக்க வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்கும் வகையில் 'மீண்டும் மஞ்சப்பை' திட்டம் குறித்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுடன், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்த தேவையான இடவசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி, சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான்கான், செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story