டாஸ்மாக் பாரில் மதுகுடித்த 2 பேர் சாவு: மேற்பார்வையாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்


டாஸ்மாக் பாரில் மதுகுடித்த 2 பேர் சாவு: மேற்பார்வையாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்
x

தஞ்சையில் டாஸ்மாக் பாரில் மது குடித்த 2 பேர் இறந்ததையடுத்து பாருக்கு மதுபானம் வினியோகம் செய்ததாக டாஸ்மாக் மேற்பார்வையாளர் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள மீன்மார்க்கெட் எதிரே அரசு டாஸ்மாக் கடையும், அதன் அருகே மதுபானக்கூடமும்(பார்) செயல்பட்டு வந்தது. இந்த மதுபான பாரில் நேற்று முன்தினம் சயனைடு கலந்த மது குடித்த குப்புசாமி, குட்டி விவேக் ஆகிய 2 பேர் அடுத்தடுத்து இறந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சவுந்தரபாண்டியன், தாசில்தார் தங்க.பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மதுபான பாரில் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்கள் எந்த கடையில் இருந்து வினியோகம் செய்யப்பட்டது என டாஸ்மாக் கடையில் உள்ள இருப்பை ஆய்வு செய்தனர்.

4 பேர் பணியிடை நீக்கம்

அப்போது பார் அருகே இருந்த டாஸ்மாக் கடையில் இருந்துதான் பாருக்கு மது வினியோகம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து டாஸ்மாக் கடைக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த மதுபானத்தை மொத்தமாக பாருக்கு வினியோகம் செய்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் முருகானந்தம், விற்பனையாளர்கள் சத்தியசீலன், திருநாவுக்கரசு, பாலு ஆகிய 4 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

உறவினர்கள் குற்றச்சாட்டு

இதற்கிடையே உயிரிழந்த விவேக் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இறந்த 2 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கொலை செய்யப்பட்டனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் சயனைடு சாப்பிட்டு இறக்கும் அளவிற்கு இருவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. சயனைடு எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். போலீசார் சயனைடு என கூறி இருவரின் மரணத்தையும் திசை திருப்ப பார்ப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

5 தனிப்படையினர் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தனிப்படையினர், மதுபான பாருக்கு சயனைடு எப்படி வந்தது? இறந்த 2 பேரும் மதுபான பாருக்கு சயனைடை எடுத்து வந்து மதுவில் கலந்து குடித்தனரா?. அவர்களுக்கு சயனைடு எங்கிருந்து கிடைத்தது? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த குப்புசாமி, குட்டி விவேக் ஆகியோரின் குடும்ப பின்னணி குறித்தும், டாஸ்மாக்கில் விற்பனையான மது குறித்தும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சயனைடு விவகாரத்தில் மதுபான பாருக்கு சயனைடு எப்படி வந்தது? யார் வாங்கி வந்தது? டாஸ்மாக் மதுவில் சயனைடை எப்படி கலந்தார்கள்? என்பன போன்ற காரணங்களுக்கு விடை கிடைத்தால்தான் இருவரின் சாவில் உள்ள மர்ம முடிச்சுக்கள் அவிழும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பலியான 2 பேரின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உடல்களை பெற்றுக்கொண்டனர்.


Next Story