ரெயிலில் அடிபட்டு 2 மேளக்காரர்கள் பலி
மந்தாரக்குப்பம் அருகே ரெயிலில் அடிபட்டு 2 மேளக்காரர்கள் பலியானார்கள். இறந்தவரின் உடலை அடக்கம் செய்துவிட்டு தண்டவாளத்தை கடந்தபோது நிகழ்ந்த விபத்து பற்றிய விவரம் பின் வருமாறு:-
மந்தாரக்குப்பம்,
கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அருகே உள்ள வடக்கு சேப்ளாநத்தத்தை சேர்ந்தவர்கள் தங்கசாமி (வயது 60), ஆதிமூலம்(68), அஞ்சாபுலி(50). மேளக்காரர்கள். அதே ஊரை சேர்ந்த வெங்கடாசலம்(75) என்பவர் வயது முதிர்வின் காரணமாக இறந்தார். இதையடுத்து அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் மேளக்காரர்கள் 3 பேரும் கலந்து கொண்டு மேளம் அடித்தனர். இதனை தொடர்ந்து வீணங்கேணி பஸ் நிறுத்தம் அருகில் தண்டவாளத்தை கடந்து அங்குள்ள சுடுகாட்டில் நேற்று மாலை வெங்கடாசலம் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
2 மேளக்காரர்கள் பலி
பின்னர் அனைவரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மேளக்காரர்கள் 3 பேரும் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி வந்த பயணிகள் ரெயில் எதிர்பாராதவிதமாக மேளக்காரர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் தங்கசாமி, ஆதிமூலம் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பலத்த காயமடைந்த அஞ்சாபுலியை அக்கம்பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.