நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி


நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 31 July 2023 1:00 AM IST (Updated: 31 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

செம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில், நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலியாகினர்.

திண்டுக்கல்

நிதி நிறுவன ஊழியர்கள்

திண்டுக்கல்லை அடுத்த மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே உள்ள குரும்பபட்டியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 22). வடமதுரை அருகே உள்ள ஊராளிபட்டியை சேர்ந்தவர் சபரிராஜா (20). இவர்கள் 2 பேரும், திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர்.

நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும், வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டுவுக்கு சென்றனர். பின்னர் வேலை முடிந்து 2 பேரும் இரவு திண்டுக்கல்லுக்கு திரும்பினர்.

2 பேர் பலி

திண்டுக்கல்-தேனி சாலையில், செம்பட்டியை அடுத்த சுதநாகியபுரம் என்ற பகுதியில் 2 பேரும் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே திண்டுக்கல்லில் இருந்து செம்பட்டி நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து ஜெகநாதன் மற்றும் சபரிராஜா ஆகியோர் தூக்கிவீசப்பட்டனர். ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். சபரிராஜா படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.

விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக செம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்த சபரிராஜாவை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story