வனப்பகுதியில் லாரி செல்வதற்கு பாதை அமைத்த காற்றாலை ஊழியர்கள் 2 பேர் கைது
நெல்லை அருகே வனப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகள் செல்வதற்கு பாதை அமைத்த காற்றாலை ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை அருகே வனப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகள் செல்வதற்கு பாதை அமைத்த காற்றாலை ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாதுகாக்கப்பட்ட காடு
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் சிப்காட் தண்ணீர் தொட்டி மேற்கு பகுதியில் காப்புக்காடு எனப்படும் வனத்துறைக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அமைந்துள்ளது.
இங்கு இரவு நேரங்களில் பொக்லைன் எந்திரங்களை கொண்டு மரங்களை அகற்றுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நெல்லை மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில், வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு நள்ளிரவில் சென்று திடீர் சோதனை நடத்தினர்.
பாதை அமைத்தனர்
அப்போது ஒரு பொக்லைன் எந்திரம் மூலம் மரங்களை சாய்த்து பாதை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த கும்பலை சுற்றி வளைத்தனர். அப்போது 2 பேர் மட்டும் சிக்கினார்கள்.
அவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சுந்தரவேல்புரம் கிராமத்தை சேர்ந்த பால்பாண்டி மற்றும் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பதும், இவர்கள் தனியார் காற்றாலை நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
காற்றாலை நிறுவன வழிகாட்டுதல்படி, வனப்பகுதி வழியாக காற்றாலைக்கு தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் செல்வதற்காக வன பகுதியில் மரங்களை அகற்றி பாதை அமைத்தது தெரியவந்தது.
2 பேர் கைது
இதுதொடர்பாக பால்பாண்டி மற்றும் மாயகிருஷ்ணன் ஆகிய 2 பேர் மீதும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக காற்றாலை நிறுவன மேலாளர் தாழையூத்து பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இதுபோன்று அரசு காப்பு காடுகளில் அத்துமீறி நுழைவது, வன உயிரினங்கள் வாழ்விடத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாவட்ட வன அலுவலர் முருகன் எச்சரித்து உள்ளார்.