கவுதாரி வேட்டையாடிய 2 என்ஜினீயர்களுக்கு அபராதம்
விளாத்திகுளம் அருகே கவுதாரி வேட்டையாடிய 2 என்ஜினீயர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே கவுதாரி வேட்டையாடிய 2 என்ஜினீயர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். அவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கவுதாரி வேட்டை
தூத்துக்குடி இ.வி. ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். தூத்துக்குடி பி.டி. காலனியை சேர்ந்தவர் அசோக். சிவில் என்ஜினீயர்களான இவர்கள் இருவரும் நண்பர்கள்.
இவர்கள் நேற்று முன்தினம் விளாத்திகுளம் அருகே உள்ள அரசன்குளம் காட்டுப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு கவுதாரி வேட்டையாடி விட்டு காரில் திரும்பிக் கொண்டிருப்பதாக குளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
வாகன சோதனை
இதையடுத்து குளத்தூர் போலீசாரும், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், முருகன், அசோக் இருவரும் துப்பாக்கியால் சுட்டு கவுதாரிகளை வேட்டையாடி அவற்றை காரில் கொண்டு வந்தது தெரியவந்தது.
உடனே அவர்களை போலீசார் பிடித்து, அவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், வேட்டையாடப்பட்ட 7 கவுதாரிகளை பறிமுதல் செய்து விளாத்திகுளம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அபராதம்
இதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, நாட்டு துப்பாக்கியால் சுட்டு கவுதாரி வேட்டையாடிய என்ஜினீயர்கள் இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். பின்னர் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.