போலி டாக்டர்கள் 2 பேர் கைது
பேரிகை அருகே போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவர் தப்பி ஓட்டம் பிடித்தார்.
ஓசூர்:-
பேரிகை அருகே போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவர் தப்பி ஓட்டம் பிடித்தார்.
மருத்துவ குழு
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பரமசிவன் ஆகியோர் கிளினிக்குகளில் ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
அதன்பேரில் ஓசூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் ஞானமீனாட்சி தலைமையில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் ராஜீவ்காந்தி, பேரிகை சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த், கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய குழு நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே அத்திமுகம் கிராமத்தில் 3 கிளினிக்குகளில் அதிரடி சோதனை நடத்தியது.
2 பேர் கைது
அப்போது, அங்கு கிளினிக் நடத்திக் கொண்டிருந்த சரவணன் என்பவரையும், அதே கிராமத்தில் மற்றொரு பகுதியில் கிளினிக் வைத்திருந்த குமுதா என்ற போலி டாக்டரையும் கையும், களவுமாக பிடித்து பேரிகை போலீசில் ஒப்படைத்தனர்.
இதில் சரவணன், பி.ஏ. இலக்கியம் படித்து விட்டு மக்களுக்கு போலியாக வைத்தியம் செய்து வந்தார். இவர், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் மீண்டும் போலி டாக்டராக கிளினிக் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றொருவர் தப்பி ஓட்டம்
கைது செய்யப்பட்ட மற்றொரு போலி மருத்துவர் குமுதா பி.இ. படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்தார். இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் மோகன் என்ற நர்சிங் படித்த மற்றொரு போலி டாக்டர் கிளினிக்கை பூட்டி விட்டு தப்பியோடி விட்டார். அவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.