திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி
2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் நுழைவு வாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.
தண்டராம்பட்டு தாலுகா நாளாள்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 85). இவரது மனைவி பேபி. இவர்களுக்கு 2 மகள், 3 மகன்கள் உள்ளனர்.
சுப்பிரமணி கடந்த 2008-ம் ஆண்டு மகள் திருமணத்திற்காக வேலூரை சேர்ந்த ஒருவரிடம் நிலத்தை அடமானமாக வைத்து ரூ.2 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. அடமானம் வாங்கியவர் அந்த இடத்தை மற்றொரு நபருக்கு விற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த நிலத்தை சுற்றி இடத்தை வாங்கியவர் கற்கள் நட முயன்று உள்ளார். இதனால் அவர்களுக்கும், சுப்பிரமணி தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
தீக்குளிக்க முயற்சி
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பிரச்சினை காரணமாக எதிர்தரப்பினர் கூலி படையினரை ஏவி சுப்பிரமணி, அவரது மனைவி, மகள்கள், மகன்களை தாக்கியுள்ளனர். இதில் அவரது ஒரு மகளுக்கு படுகாயம் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுப்பிரமணி அவரது மனைவி பேபி, மகள் சரஸ்வதி, மகன் பாலகிருஷ்ணன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மகளின் குழந்தைகளுடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் தனித்தனியாக சென்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். அப்போது அவர்கள் தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். பின்னர் அவர்களை போலீசார் ஆட்டோவில் ஏற்றி திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சொத்து பிரச்சினை
முன்னதாக தண்டராம்பட்டு தாலுகா தரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்த மாப்பிளேஸ்வரன் (75) என்பவர் அவரது மனைவி மங்கை (50), மகன்கள் முத்துகிருஷ்ணன் (32), மணிகண்டன் (28) ஆகியோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக போர்ட்டிகோ முன்பு திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் எங்கள் சொத்தை சிலர் அபகரிக்க முயற்சிக்கின்றனர். சொத்து பிரச்சினை குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி விடுகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர் அவர்களையும் போலீசார் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவங்களால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.