2 குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த அவலம்
பாதைக்கு இடம் வழங்க மறுப்பு தெரிவித்ததால் 2 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடந்தது. இதையொட்டி திண்டுக்கல், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த நிலையில் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம் சித்தூரை அடுத்த கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் உள்பட சிலர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டரிடம் ஒரு மனுவை கொடுத்தனர். அந்த மனுவில், எனது குடும்பம் மற்றும் எனது உறவினர் குடும்பத்தினர் அருகருகே வீடுகட்டி வசித்து வருகிறோம். இந்த நிலையில் மற்றொரு உறவினர் குடும்பத்தினர் எங்களுக்கு சொந்தமான இடத்தில் பாதை விடவேண்டும் என்று கேட்டனர். அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்தோம். இதையடுத்து அந்த உறவினர்கள் ஊர் முக்கியஸ்தர்களிடம் இதுகுறித்து தெரிவித்தனர். அவர்கள் ஊர் கூட்டத்தை கூட்டி எங்களிடம் பாதைக்கு இடம் வழங்கும்படி தெரிவித்தனர்.
நடவடிக்கை
அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்தோம். இதனால் பாதை வழங்க மறுத்த 2 குடும்பங்களையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக ஊர் முக்கியஸ்தர்கள் அறிவித்தனர். பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் கொடுத்த மனுவில், வேடசந்தூர் தாலுகா பாடியூரில் விவசாய நிலத்தை வாங்கி தனியார் சோலார் நிறுவனத்தினர் சோலார் பேனல் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அப்பகுதியில் உள்ள பனை, வேம்பு, புளியமரம் போன்ற பல்வேறு ரக மரங்களை வெட்டி அழிக்கின்றனர். இதனால் சுற்றுப்புற சூழல் பாதிப்படைகிறது. எனவே விவசாய நிலங்களில் சோலார் பேனல் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மேற்கண்ட மனுக்கள் உள்பட 185 மனுக்கள் பெறப்பட்டன.
இலவச வீட்டுமனை பட்டா
அவற்றின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதையடுத்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் 14 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார். மேலும் அலுவலகங்கள், பள்ளிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்கும் விதமாக புகார் பெட்டிகளை அந்த இடங்களில் வைக்கவும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.