2 விவசாயிகள் தற்கொலை
நிலக்கோட்டை அருகே வெவ்வேறு சம்பவங்களில் விவசாயிகள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
நிலக்கோட்டை அருகே உள்ள சங்கால்பட்டியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 30). விவசாயி. இவர், வயிற்றுவலியால் அவதிப்பட்டார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த மதன்குமார், விஷம் குடித்து நேற்று மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மதன்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் நிலக்கோட்டை அருகே உள்ள சி.புதூரை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் (45) என்பவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் கால்முறிவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலில் உள்ள புண் ஆறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இவ்விரு சம்பவங்கள் குறித்து, நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.