விஷம் குடித்து விவசாயி 2 பேர் தற்கொலை
ஜேடர்பாளையம், கந்தம்பாளையம் பகுதிகளில் விஷம் குடித்த விவசாயி 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
விவசாயி
ஜேடர்பாளையம் அருகே உள்ள கண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 65), விவசாயி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பொன்னுசாமி தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் பொன்னுசாமிக்கும் அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பொன்னுசாமி உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் பொன்னுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
கந்தம்பாளையம் அருகே உள்ள ஜமீன் இளம் பள்ளி கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 53). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் கை மூட்டு வலி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாகவும், இது குறித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று மூட்டு வலி தாங்க முடியாமல் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அதை பார்த்த அவரது குடும்பத்தினர் முருகேசனை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.