ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 2 பெண் சிசுக்கள் உயிரிழப்பு


ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 2 பெண் சிசுக்கள் உயிரிழப்பு
x

உசிலம்பட்டியில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 2 பெண் சிசுக்கள் உயிரிழந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டியில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 2 பெண் சிசுக்கள் உயிரிழந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் சிசு திடீர் சாவு

உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதிகா. இவருடைய மனைவி ஜெயராம். இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 2-வது பெண் குழந்தையாக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் ஆரோக்கியத்துடன் பிறந்தது.

இந்த பெண் சிசுவிற்கு அதிகாலை மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்ததாக பெற்றோர் அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் பெண்சிசு ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். ஆரோக்கியத்துடன் பிறந்த பெண்சிசு ஆஸ்பத்திரி வார்டிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூச்சு திணறல்

இதே போல் கடந்த 2-ந் தேதி ஜோதில்நாயக்கனூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாசுகி - ராஜ்குமார் தம்பதிக்கு 2-வது பெண் குழந்தையாக ஆரோக்கியத்துடன் பிறந்த பெண்சிசு பிறந்த 7 நாட்களில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தது. இது குறித்து எழுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த குழந்தையை உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரே வாரத்தில் அடுத்த பெண்சிசு மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் குறித்து சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் தீவிர விசாரணை

இதையடுத்து விரைந்து வந்த போலீசார் ஆஸ்பத்திரியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்சிசு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story