2 விசைப்படகுகள் தரைதட்டி கடலில் கவிழ்ந்தன


2 விசைப்படகுகள் தரைதட்டி கடலில் கவிழ்ந்தன
x

பழையாறு மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் 2 விசைப்படகுகள் தரை தட்டி கடலில் கவிழ்ந்தன. முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டுகளை அகற்ற மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

பழையாறு மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் 2 விசைப்படகுகள் தரை தட்டி கடலில் கவிழ்ந்தன. முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டுகளை அகற்ற மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 விசைப்படகுகள் தரைதட்டின

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு பகுதியை சேர்ந்தவர்கள் சுரேந்தர் மற்றும் செழியன். மீனவர்களான இவர்கள் 2 விசைப்படகுகளில் 12-க்கும் மேற்பட்டவர்களுடன் பழையாறு துறைமுகத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.இந்த நிலையில் அவர்கள் மீன்களை பிடித்துக்கொண்டு நேற்று காலை கரைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரத்தில் 2 விசைப்படகுகள் அடுத்தடுத்து தரைதட்டி கடலில் கவிழ்ந்தன.

மீட்கும் பணி

இதுகுறித்து தகவல் அறிந்த மீனவர்கள் படகுகளில் சென்று தரை தட்டிக் கவிழ்ந்த விசைப்படகுகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் ஒரு படகை மீட்டனர். மற்றொரு விசைப்படகை மீட்க முடியவில்லை. இதை தொடர்ந்து கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலோர படை போலீசார் படகில் சென்று மீனவர்களுடன் இணைந்து கவிழ்ந்து கிடங்கும் விசை படகை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

தரைதட்டிய படகை மீட்பதற்காக பழையாறு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக தங்களது படகுகளை பழையாறு துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த வெள்ள நீர் பழையாஹ துறைமுகத்தின் முகத்துவாரம் வழியே கடலில் கலந்து வருகிறது. இதனால் முகத்துவாரத்தில் மணல் அதிகளவு சேர்ந்து திட்டு ஏற்பட்டுள்ளது.

மணல் திட்டுகளை அகற்ற வேண்டும்

மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய விசைப்படகுகள் முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டில் தரைதட்டி கவிழ்ந்துள்ளது. ரூ.50 லட்சம் மதிப்பிலான 2 விசைப்படகுகளும் முழுமையாக சேதம் அடைந்துள்ளன. எனவே முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டுகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story