மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் நண்பர்கள் 2 பேர் பலி
தோகைமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் நண்பர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நண்பர்கள்
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 39). அதே பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை (35). நண்பர்களான இவர்கள், மரம் வெட்டும் கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் 2 பேரும் வீட்டில் இருந்து வேலைக்காக காவல்காரன்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சின்னத்துரை ஓட்டினார். வடிவேல் பின்னால் அமர்ந்து இருந்தார். மோட்டார் சைக்கிள் தோகைமலை அருகே திருச்சி-பாளையம் மெயின் சாலையில் கன்னிமார்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
2 பேர் பலி
இந்தநிலையில் முன்னாள் சென்ற ஆட்டோவை மோட்டார் சைக்கிள் முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிரே திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள கட்டரெட்டியூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் (30) என்பவர் காரைக்காலில் இருந்து திண்டுக்கல் நோக்கி நிலக்கரிகளை லாரியில் ஏற்றி வந்தார்.கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரி, சின்னத்துரை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக திருச்சி-பாளையம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் விபத்தில் இறந்த சம்பவம் அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.