விஷம் கலந்து கொடுத்த கேக்கை சாப்பிட்டு உயிருக்கு போராடும் 2 சிறுமிகள்
விஷம் கலந்த கேக்கை தானும் சாப்பிட்டதுடன், தனது 2 மகள்களுக்கும் இரும்பு வியாபாரி கொடுத்தார். உயிருக்கு போராடும் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஷம் கலந்த கேக்கை தானும் சாப்பிட்டதுடன், தனது 2 மகள்களுக்கும் இரும்பு வியாபாரி கொடுத்தார். உயிருக்கு போராடும் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2 சிறுமிகள்
விருதுநகர் அருகே உள்ள சின்னபேராலி கிராமம் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் முரளி குமார் (வயது 37). பழைய இரும்பு வியாபாரியான இவருக்கு அட்சயா (10), அகல்யா (7) என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி 2 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார்.
முரளிகுமார் இரு பெண் குழந்தைகளையும் பராமரித்து வருகிறார். மனைவி இறந்ததால், அவர் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் விருதுநகரில் கேக் வாங்கினார். பின்னர் அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி அருகில் கேக்கில் குருணை மருந்து (விஷம்) தடவி தனது 2 பெண் குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு தானும் அதை சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
உயிருக்கு போராடினர்
இந்தநிலையில், நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வராததால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சந்தேகப்பட்டு அவரது வீட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கு முரளிகுமாரும், குழந்தைகளும் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து அல்லம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சுதாராணி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார், முரளிகுமார் மீது இரு குழந்தைகளையும் கொல்ல முயன்றதாகவும், அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.