2 சிறுமிகளை கழுத்தை இறுக்கிக்கொன்று தூக்கில் தொங்கவிட்டு, தாயும் தற்கொலை


2 சிறுமிகளை கழுத்தை இறுக்கிக்கொன்று தூக்கில் தொங்கவிட்டதுடன் தாயும் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்


2 சிறுமிகளை கழுத்தை இறுக்கிக்கொன்று தூக்கில் தொங்கவிட்டதுடன் தாயும் தற்கொலை செய்து கொண்டார்.

தூக்கில் தொங்கிய 3 பேர்

விருதுநகர் அருகே உள்ள பி.குமாரலிங்கபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 37). இவருக்கும் ஆமத்தூர் அருகே உள்ள சாத்துப்பிள்ளைபட்டியை சேர்ந்த பெத்தம்மாள் (35) என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுடைய பெண் குழந்தைகள் பாண்டிச்செல்வி (6) கார்த்திகாயினி(3).

இதில் பாண்டிச்செல்வி விருதுநகரில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தாள்.

சரவணகுமார் கூலி வேலைக்கு சென்றுவந்தார். நேற்று காலை வழக்கம் போல் அவர் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் 2 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது ெவளிப்புற கதவு சாத்தப்பட்டிருந்தது. கதவை திறந்து உள்ளே பார்த்தபோது அவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. மனைவி பெத்தம்மாளும், இரண்டு குழந்தைகளும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அலறினார்.

உடல்கள் மீட்பு

உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, சரவணகுமாரின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். இதுகுறித்து ஆமத்தூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் தாய், 2 சிறுமிகளின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:-

காரணம் என்ன?

சமீப காலமாக பெத்தம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று தனது இரு பெண் குழந்தைகளின் கழுத்தை இறுக்கி கொன்று வீட்டுக்கூரையின் பனைமர சட்டத்தில் இரு குழந்தைகளின் உடல்களையும் தொங்க விட்டுவிட்டு, பனைமர சட்டத்தில் தூக்குப்போட்டு பெத்தம்மாளும் தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என கருதுகிறோம். இந்த சம்பவத்துக்கு வேறு காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்..

இந்த சோக சம்பவம் பற்றி ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.


Next Story