துபாய்க்கு கல்வி சுற்றுலா செல்ல நீலகிரியை சேர்ந்த 2 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 2 அரசு பள்ளி மாணவர்கள் துபாய்க்கு கல்விச்சுற்றுலா செல்ல தேர்வாகி உள்ளனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 2 அரசு பள்ளி மாணவர்கள் துபாய்க்கு கல்விச்சுற்றுலா செல்ல தேர்வாகி உள்ளனர்.
கல்விச்சுற்றுலா
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் மத்தியில் கல்வி மட்டுமின்றி நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் போன்றவற்றில் சிறந்து விளங்கும் வகையிலும், அவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு கலைத்திருவிழா உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு வெளிநாடு, தேசிய மற்றும் மாநில அளவில் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்று 2022-23-ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்து இருந்தார்.
அதன்படி 2022-23-ம் கல்வி ஆண்டில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் பள்ளிகளில் நடக்கும் இலக்கிய மன்றம், வினாடி-வினா போட்டி, சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் வானவில் மன்றம் போன்ற செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி இலக்கிய மன்றம், வினாடி-வினா போட்டி, சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் வானவில் மன்றம் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ-மாணவிகளின் திறனை கண்டறிந்து பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட அளவில் தேர்வான மாணவர்கள் மாநில அளவில் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர்.
துபாய் பயணம்
இவ்வாறு தற்போது தமிழகத்தில் இருந்து 150 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதன்படி நீலகிரி மாவட்டத்தில் வானவில் மன்றத்தில் சிறந்து விளங்கிய எதிர்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நஜ்மல் மற்றும் இலக்கிய திருவிழாவில் சிறப்பாக பங்களிப்பாற்றிய தேவாலா அரசு பள்ளி மாணவர் ஜோமி ஆகியோர் துபாய் செல்ல தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு பாஸ்போர்ட் உள்ளிட்ட பணிகளை முடிக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. துபாய் செல்ல தேர்வான மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி மற்றும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.