2 வீடுகளில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்


2 வீடுகளில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்
x

2 வீடுகளில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசமானது

திருச்சி

திருச்சியில் 2 வீடுகளில் ஏற்பட்ட தீவிபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாயின.

தீ விபத்து

சென்னையில் ஒரு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் கோவிந்தராஜன் (வயது 55). இவருக்கு சொந்தமான வீடு திருச்சி சின்னசவுராஷ்டிரா தெரு அருகே நீத்துக்கார தெருவில் உள்ளது. அந்த வீட்டின் மாடியில் உள்ள வீட்டை இரண்டாக பிரித்து தியாகராஜன் (45), வினோத் (35) ஆகியோருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை இருவீட்டில் இருப்பவர்களும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தியாகராஜன் வீட்டில் காலை 11.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பற்றி எரிந்து, ஜன்னல் வழியாக புகை வந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கோட்டை போலீஸ் நிலையத்துக்கும், கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

குறுகலான வீதி

உடனே மாவட்ட தீயணைப்பு உதவி அதிகாரி லியோ ஜோசப் ஆரோக்கியராஜ் தலைமையில் நிலைய அதிகாரி நாகவிஜயன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பெரியகடை வீதியில் இருந்து சம்பவம் நடந்த இடம் மிகவும் குறுகலான வீதியில் இருந்ததால் தீயணைப்பு வாகனத்தை அங்கு கொண்டு செல்ல முடியவில்லை.

இதைத்தொடர்ந்து பெரியகடைவீதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட குழாய்களை இணைத்து சம்பவ இடத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் தீ மாடியில் பிடித்து எரிந்ததால், அவர்களால் உடனே மேலே செல்ல முடியவில்லை. கீழே இருந்த படியே தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் அதற்குள் இருவீடுகளுக்கும் இடையே இருந்த மரக்கதவு தீப்பிடித்து எரிந்து, வினோத்தின் வீட்டிற்குள்ளும் பரவியது.

பொருட்கள் எரிந்து நாசம்

இதில் அந்த கதவையொட்டி இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்தன. 1 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் ஒருவழியாக வீட்டிற்குள் சென்று தண்ணீரை பீச்சி அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த சம்பவத்தில் தியாகராஜன் வீட்டில் 2 பீரோவில் இருந்த பொருட்கள், சோபாசெட், சமையல் பொருட்கள், பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எாிந்து நாசமானது. இதுபோல், வினோத் வீட்டிலும் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது.

சம்பவ இடத்தில் கோட்டை போலீசார் மற்றும் டவுன் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணப்பிரியா ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story