கொடைக்கானல் அருகே பலத்த மழைக்கு 2 வீடுகள் சேதம்
கொடைக்கானல் அருகே பலத்த மழைக்கு 2 வீடுகள் சேதமடைந்தது.
கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பெரும்பாறை, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. பின்னர் இரவு 9 மணிக்கு மேல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இரவு 10.30 மணி வரை சுமார் 1½ மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
குறிப்பாக பூலத்தூர் கிராமத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது அங்குள்ள முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்த காஞ்சனா, சிவபெருமாள் ஆகியோரின் வீடுகள் மீது மரம் சாய்ந்து விழுந்தது. இதில், 2 வீடுகளின் மேற்கூரை, சுற்றுச்சுவர் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். ஆனால் வீட்டில் இருந்த டி.வி., பீரோ, கட்டில் மற்றும் பொருட்கள் சேதமடைந்தன. மேலும் பூலத்தூர் கிராமத்தில் உள்ள 4 மின்கம்பங்கள் மரம் சாய்ந்ததில் சேதமடைந்தன. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.