உசிலம்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலி- 3 பெண்கள் படுகாயம்


உசிலம்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலி- 3 பெண்கள் படுகாயம்
x

உசிலம்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலியானார்கள். இதில் 3 பெண்கள் படுகாயம் அடைந்தார்கள்.

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலியானார்கள். இதில் 3 பெண்கள் படுகாயம் அடைந்தார்கள்.

ஆட்டோ கவிழ்ந்தது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து வாலாந்தூருக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ சென்றது. அந்த ஆட்டோவை கட்டகருப்பன்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஓட்டி வந்தார். இந்த ஆட்டோ மதுரை சாலையில் உள்ள பொட்டுலுப்பட்டி-குப்பணம்பட்டி இடையே நேற்று மாலை 4 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

2 பேர் பலி

இதில் ஆட்டோவில் பயணித்த சக்கிலியங்குளத்தைச் சேர்ந்த வெள்ளையாண்டி என்பவரின் மகனான 11 வயது பள்ளி மாணவன் லோகேஷ், வாலாந்தூரை சேர்ந்த ஜெயராஜ் (52) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பள்ளி மாணவனின் தாய் ஜெயா(35), உயிரிழந்த ஜெயராஜின் மனைவி ராஜாத்தி (48) மற்றும் வாலாந்தூரைச் சேர்ந்த சுதா (33) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தார்கள்.

போலீசார் விரைந்தனர்

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற உசிலம்பட்டி போலீசார் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான லோகேஷ், ஜெயராஜ் ஆகிய 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உசிலம்பட்டி தாலுகா போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது ஏன்? ஆட்டோவில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டதா? அல்லது ஆட்டோ டிரைவரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்தவுடன் தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story